Tuesday, June 16, 2009

நாடுகடந்த அரசும் இராணுவ ஆட்சியும்



இலங்கைத்தீவின் அரசியல் களநிலை என்பது இன்று யாருடைய கற்பனைக்கும் எட்டாத வகையில் சர்வதேச வல்லரசுகளும் பிராந்திய அரசுகளும் நீண்டகால நலன்களுக்காகக் காய்நகர்த்தும் சதுரங்கமாக மாறியிருக்கின்ற நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அடிப்படையிலான புலம்பெயர் தமிழ்மக்களின் நகர்வும் சிங்கள அரசாங்கத்தின் திரை மறைவு நகர்வுகளும் மிகப்பெருந் திருப்பங்களை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.

ஸ்ரீலங்கா அரசாங்கமானது முற்றுமுழுதாக இராணுவ அரசாங்கமாக அல்லது இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசாங்கமாக மெல்ல மெல்ல மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. முல்லைத்தீவில் முறைதவறிய யுத்தத்தை மேற்கொண்டு தமிழ்மக்களை அடக்கி ஒடுக்கி மடக்கிவைத்தபின்னர், ஸ்ரீலங்கா அரசாங்கத் தரப்பு மேற்கொண்டுவருகின்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. ஸ்ரீலங்காவின் இராணுவ ஆளணியை 5 இலட்சமாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவும், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மேலதிக அதிகாரங்களோடு முப்படைகளின் ஒட்டுமொத்த தளபதி என்று வழங்கப்படவுள்ள பதவிநிலையும், ரஷ்யாவிலும் இன்னும் பல நாடுகளிலும் கொள்வனவு செய்யப்படுகின்ற விமானங்களும் ஆயுத தளபாடங்களும், ஸ்ரீலங்காவின் ராஜபக்ச சகோதரர்களால் முற்றாக அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் விடுதலைப்புலிகளிடம் இருந்தான பாதுகாப்புக்கு என்று யாராவது நம்பினால் அது அவரது அறியாமையே தவிர வேறில்லை. ஒப்பிட்டுப்பார்த்தால் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது சென்றிருக்கும் மியான்மார் அல்லது பர்மாவின் ஆட்சியும் ஸ்ரீலங்கா அரசாங்கம் சென்றுகொண்டிருக்கும் வழிமுறையும் வேறில்லை என்பது தெரியும்.

மிகப்பெரும் இராணுவ பலம், சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் மீதான தடைகள், மனித உரிமை மற்றும் தொண்டு அமைப்புக்கள் மீதான இறுக்கமான கட்டுப்பாடுகள், மேற்குலகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்பவற்றோடு, உலகப்பேரரசாக மாறிவரும் சீனாவின் அசைக்கமுடியாத ஆதரவு என்பவற்றைப் பட்டியலிட்டால் இந்த உண்மைகள் புரியும். அடுத்து நடக்கப்போவது என்ன என்பதையும் இலகுவாகக் கூறிவிட முடியும்.

போட்டியின்றி அல்லது பெயரளவிலான போட்டியுடன் அடுத்த ஆட்சிக்காலத்துக்குரிய ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்படுவார். அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக அவருடைய சகோதரர் கோத்தாபய ராஜபக்ச தெரிவாவதுடன், அரசியலமைப்புத் தீர்மானங்களை மாற்றக்கூடிய மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மை இன்றைய ஆளுங்கட்சிக்குக் கிடைக்கும். அதற்காகவும் ராஜபக்ச சகோதரர்களின் எதிர்காலத் தேவைக்காகவும் தமிழ்க்கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படும் ஏனயவை இல்லாமற்செய்யப்படும். விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் செல்வாக்கோடு இருந்து இப்போது சிறைப்பட்டுள்ள சிலர் அரசாங்கக் கட்சியின் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படுவர். இப்படியான வழிமுறைகளில் பெறப்படுகின்ற உறுதியான ஆட்சியோடு மூன்றில் இரண்டுபங்கு பாராளுமன்றப் பெரும்பான்மையும் கிடைத்தால், ராஜபக்சவின் ஆயுள் முழுவதற்குமான நிலையான ஆட்சிக்கு வழியேற்படும். இந்தப் போக்கில் மியான்மாரைப் போன்ற இராணுவ ஆட்சி அல்லது இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சி அமையலாம்.

இப்படியான நிலையில் இந்தியா சும்மாயிருக்குமா என்ற கேள்வி எழலாம். இந்தியாவின் பிராந்திய நலனுக்கு அவசியமான வகையில் இலங்கைத்தீவில் இந்தியாவின் சொற்படி கேட்கும் அரசாங்கம் இருக்கவேண்டியது அவசியம். சிங்களவர்கள் தங்களை நட்புநாடாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரிந்த ஒன்று. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக இப்போது இருப்பவர்களை மட்டுமே இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும் என்பதும் வெளிப்படையானது. எனவே, வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கான சுயாட்சி என்ற பெயரில் ஏதோவொரு பொம்மை ஆட்சி இந்தியாவுக்குக் கட்டுப்பட்ட நிலையில் அமையவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாகவும் தீர்மானமாகவும் அமைந்திருக்கிறது. இதற்காகவே இந்திய மத்திய அரசு தமிழ்க்கட்சிகளை வரவழைத்துப் பேசியுமிருக்கிறது. தமிழ்க்கட்சிகளும் வேறு வழியில்லாமல் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குக் கட்டுப்பட்டாக வேண்டிய நிலையில் இருக்கின்றன. இருந்தாலும் இப்படியான இந்தியாவின் நகர்வை பிக்குகளும் ஜே.என்.பி, ஜே.வி.பி போன்ற கட்சிகளும் அனுமதிக்கப்போவதில்லை. நிபந்தனைகளோடு கூட்டுச்சேரும் இந்தியாவைவிட நிபந்தனையின்றி ஆதரவு வழங்கும் சீனாவே சிங்கள தேசத்தின் அபிமானத்தைப் பெற்றது என்பதும் வெளிப்படை. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு வடக்கு கிழக்கில் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க வழங்கப்பட வேண்டிய அனுமதியை மறுப்பது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இதுவரைகாலமும் ஈழத்தமிழர்கள் “இந்தியா ஏதாவது செய்யும்” என்று காத்திருந்ததுபோல இனி இந்தியாவும் “ஸ்ரீலங்கா ஏதாவது தரும்” என்று காத்திருக்க வேண்டியதுதான்.

இப்படியான சூழ்நிலையில் புலம்பெயர் தமிழ்மக்களின் அடுத்த நகர்வாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைக்கும் தீர்மானம் செயற்பாட்டுக்கு வந்திருக்கிறது. புலம்பெயர் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கின்ற நாடுகளில் கிளைகளை அமைத்து அந்தக் கிளைகள் அனைத்தையும் ஒன்றிணைந்த ஒரு மத்திய அமைப்பை (பேரவை) உருவாக்குவதன் ஊடாக ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ்மக்களின் ஒருமித்த குரலான ஒரு அமைப்பினை ஏற்படுத்துவதற்கான அத்திவாரம் இடப்பட்டிருக்கிறது. அந்த நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுவோர் தேர்தல்முறை மூலம் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட உள்ளதாகக் கூறப்பட்டிருப்பதால் மேற்குலகம் கூறிவரும் ஜனநாயக அடிப்படையிலான பிரதிநிதிகள் என்கின்ற தகுதியும் கிடைத்துவிடும். இந்த நடவடிக்கைக்காக தமிழ்மக்கள் சார்பாக இதுவரை குரல்கொடுத்துவந்த முக்கிய அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாடுகடந்த அமைப்பு அல்லது அரசாங்கத்துக்கு தமிழீழ அரசாங்கம் என்று பெயரிடப்படுவது சோர்ந்துபோயுள்ள புலம்பெயர் தமிழ்மக்களை உற்சாகப்படுத்தவா என்பது தெரியவில்லை. உண்மையில் தற்போது கூறப்படுவதைப்போன்று ஒட்டுமொத்த புலம்பெயர்ந்தவர்களுக்கான ஒரு அமைப்பு (நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்) ஏற்படுத்தப்படுமாக இருந்தால், அது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நகர்வாகப் பார்க்கப்படும். அந்த அமைப்பின் ஊடாக இரண்டாகப் பிரிந்துகொண்டிருக்கும் உலகநாடுகளில் ஒரு பிரிவோடு இணைந்துகொள்ளவும் எதிர்காலத் திட்டங்களை வலிமையோடு எடுத்துச் செல்லவும் வாய்ப்பு ஏற்படும். பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் அதன் சார்புடைய நாடுகளோடுதான் அந்த இணைப்பு ஏற்படும் என்பது என் எதிர்பார்ப்பு. இருப்பினும், புலம்பெயர் தமிழ்மக்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்ப்பதுபோல அது உண்மையான நாடுகடந்த அரசாங்கமாக இருக்குமா? அல்லது பணம்சேர்க்கும் இன்னொரு வழிமுறையாக மாறிவிடுமா என்பது காலப்போக்கில் தெரிந்துவிடும்.

நிறைவுசெய்வதற்கு முன்பாக,

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனையும் அவருடைய கருத்துக்களையும் வழிகாட்டல்களையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறும் விடுதலைப் புலிகளது அரசியல்துறையின் இப்போது வெளியில் வெளிப்படையாக இருக்கும் ஓரே முக்கிய நபரான மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகனையும் துரோகிகள் என்று திட்டித்தீர்ப்பவர்களுக்கு, இப்போது விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக்கான குழுவில் இடம்பெற்றிருந்த சட்டவாளர் உருத்திரகுமார், பேராசிரியர் பிரான்சிஸ் போய்ல், மனிதஉரிமைப் போராளி கரன் பார்க்கர் அம்மையார், பேராசிரியர் பீற்றர் சால்க், மலேசியப் பேராசிரியர் பி.இராமசாமி மற்றும் கலாநிதி முருகர் குணசிங்கம் ஆகியோரும் புதிய துரோகிகளாக இணைந்துள்ளனர். அந்தவழியில் பார்த்தால் புலம்பெயர்ந்திருக்கும் ஈழத்தமிழர்களில் தமிழீழத் தேசிய உணர்வாளர்களைவிட துரோகிகள் பலமடங்கு அதிகமாக இருக்கிறார்கள் போலிருக்கிறது.

இப்படியான குடுமிப்பிடி சண்டைகளை நிறுத்திவிட்டு வதைமுகாம்களில் அவலப்படும் மக்களையும், சிறைப்பட்டுள்ள போராளிகளையும், காடுகளெங்கும் தொடர்புகளின்றிக் காத்திருக்கும் ஏனய போராளிகளையும் காப்பாற்ற ஏதாவது செய்யலாம்...


8 comments:

பிளாட்டினம் said...

இந்த நாடு கடந்த நாடு அமைக்க எந்த நாடும் உதவாது என்று தெரிந்தும், நாங்கள் கொஞ்ச கால நேரம் மக்களை சாந்திப் படுத்த, எங்களாலையே எங்களுக்குள் மீண்டும் உருவாக்கப்படும் ஒரு சட்ட அமைப்பு கட்சி தான் இது. அப்பிடி தானே? முடியாது என்று தெரிந்தும் ஏன் பண்ணுறாங்கள்?

கிருஷ்ணா said...

//பிளாட்டினம் said...
இந்த நாடு கடந்த நாடு அமைக்க எந்த நாடும் உதவாது என்று தெரிந்தும், முடியாது என்று தெரிந்தும் ஏன் பண்ணுறாங்கள்?//

எதையுமே செய்யாமல் இருந்து புலம்பெயர் நாடுகளில் சில்லுச்சில்லாய்ச் சிதறிப்போவதை விட இப்படியான கட்டமைப்புக்களை உருவாக்குவது விவேகமானது. இதில் மேற்குலகின் பங்களிப்பு இல்லையென்று கூறமுடியாது. போலியாகவாவது ஜனநாயகம் பேசும் மேற்குலகத்துடன் இவ்வாறான அமைப்புக்கள் மூலமாகத்தான் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதேநேரம் முகாம்களில் இருக்கும் மக்களின் நிலைகுறித்து இங்கு யாரும் உண்மையாக அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சாட்டி நிதி வசூலிப்பதற்கான திட்டங்களோடு பலர் தயாராகியிருப்பதாகவும் கேள்வி..

பிளாட்டினம் said...

ம்ம்.. அது உண்மை தான் அண்ணா. என்றாலும் ஏதும் செய்யோணும், விடிவு வேணும் , ஒரே வழி அண்ணன் வழி என்று, சாத்தியமானதை மட்டும் தான் இனிமேல் செய்யோணும், மாற்றாரை நம்ப கூடாது, என் கை தான் எனக்கு உதவி என்று உண்மையா யோசிக்கிரவங்களை இந்த நாடு கடந்த அரசு என்றது சின்னப் பிள்ளைதன வேலை என்று நினைக்க வைக்குதே? எப்பிடி யாரை போயி நம்புறது?

கிருஷ்ணா said...

//பிளாட்டினம் said...
நாடு கடந்த அரசு என்றது சின்னப் பிள்ளைதன வேலை என்று நினைக்க வைக்குதே? எப்பிடி யாரை போயி நம்புறது?//

தலைவர் எந்தப் பதவிக்கும் தகுதியான ஒருவரையே நியமிப்பார் என்று நீங்கள் நம்பினால், இந்த முன்னெடுப்புக்களையும் நம்பித்தான் ஆகவேண்டும். திக்குத் தெரியாமல் அலைவதைவிட, கிடைத்த துரும்பைப் பற்றிக்கொள்பவன் புத்திசாலி...

பதி said...

இந்த நாடு கடந்த அரசு என்பதைப் பற்றிய உங்களது விளக்கமும் அதன் தேவையை உணர்த்தும் கருத்துக்களும் நன்று...

இந்த "துரோகி" என்னும் சொல்லைப் பற்றி முல்லைமண் என்னும் பதிவில் நானிட்ட பின்னூட்டமே இங்கும்...

//துரோகியென்ற சொல் அதிகபட்சம் ஒருவருக்கான தண்டனையான சொல்.//

எனக்கு தெரிந்தவரையில் தமிழீழப் போராட்டத்தைத் தவிர்த்து வேறு எவரும் இந்த அளவிற்கு இந்தச் சொல்லை உபயோகப்படுத்தியிருபார்களா என்பது சந்தேகமே....


//நீங்கள் துரோகியாக்கிய யாரையும் எவரும் விலைக்கில்லை இலவசமாகவும் வாங்கமாட்டார்கள்.//

:)

http://mullaimann.blogspot.com/2009/06/blog-post_20.html

கிருஷ்ணா said...

//பதி said...
எனக்கு தெரிந்தவரையில் தமிழீழப் போராட்டத்தைத் தவிர்த்து வேறு எவரும் இந்த அளவிற்கு இந்தச் சொல்லை (துரோகி) உபயோகப்படுத்தியிருபார்களா என்பது சந்தேகமே//

”இது மேலிடத்து உத்தரவு” என்கிற நியாயமான கேள்விகளை எழுப்புபவர்களின் வாயை அடைக்கும் இன்னொரு சொல்லும் இருக்கிறது பதி.

-பருத்தியன்- said...

மகிந்தவின் மியான்மார் பயணமே இலங்கையின் எதிர்கால ஆட்சி எப்படியிருக்கும் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது.
எனது விருப்பம் என்னவென்றால், இலங்கை இராணுவ ஆட்சி நாடாக மாற வேண்டும். இதனால்.. இந்தியா திணற வேண்டும்.
தமிழரின் நியாயத் தன்மையை உலகம் புரிந்துகொள்ள அது ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் .

"நாடு கடந்த தமிழீழ அரசு"- இதைப் பொறுத்தவரையில் உங்கள் கருத்தே எனது கருத்தும் கிருஷ்ணா அண்ணா.

கிருஷ்ணா said...

//பருத்தியன்- said...
தமிழரின் நியாயத் தன்மையை உலகம் புரிந்துகொள்ள அது ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும்//

தமிழரின் நியாயத்தன்மை உலகுக்குத் தெரியாது என்றா சொல்ல வருகிறீர்கள்?

இது வியாபார உலகம் பருத்தியன். எங்களிடமிருந்து வாங்குவதற்கு எதுவும் இல்லாததால், அல்லது நாங்கள் எதையும் கொடுக்க விரும்பாததால் உலகம் எங்களுக்கும் எதையும தராமல் இருக்கிறது. நீதி நேர்மை என்பவற்றை ஒருபக்கம் வைத்துவிட்டு இந்த சர்வதேச வியாபார தந்திரத்தை நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.

Modified by Blogger Tutorial

நேற்றைய காற்று ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com

TOP