புலம்பெயர் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முக்கிய விடயங்களாக கவன ஈர்ப்புப் போராட்டங்கள், ஸ்ரீலங்காவின் உற்பத்திகளை நிராகரித்தல், ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை இருட்டடிப்புச் செய்து அதிலும் அரசியல் செய்துவரும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்கும்படியான பரப்புரைகள் ஆகிய மூன்றும் முன்னுரிமை பெறுகின்றன. தமிழீழ விடுதலைப் பயணத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கின்ற நிலையில் இந்தப் போராட்டங்கள் நியாயமானவை, முழு வீச்சுடன் செய்யப்பட வேண்டியவை என்று கூறப்படுவதை நிராகரிக்கமுடியாது. ஆனால், இந்தப் போராட்டங்களுக்குள் நடக்கின்ற அரசியலைப் பார்த்தால் இவை யாருக்காக அல்லது எதற்காக என்று கேட்கத்தோன்றுகிறது.
கனடாவில் நடைபெறும் கவன ஈர்ப்புப் போராட்டங்களிலிருந்து தமிழ்மக்கள் பல காரணங்களால் கொஞ்சங்கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்திருக்கின்றனர். சங்கங்கள் அமைப்புக்களிடையில் ஏற்பட்டிருக்கின்ற போட்டிகளால் உருவான பிளவுகள் இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், மக்கள் சரியான முறையில் வழிநடத்தப்படாததும், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இங்குள்ள மேதாவிகள் அவ்வப்போது கூறிய சில கருத்துக்கள் இப்போது மக்களைப் பயமுறுத்த ஆரம்பித்ததும்தான் முக்கியமான காரணங்களாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
கனேடியப் பாராளுமன்றம் அமைந்துள்ள ஒட்டாவாவில் 5ம் திகதி நடைபெறும் வாகனப் பேரணியுடனான கவன ஈர்ப்புக்கு இங்குள்ள முக்கிய தரப்புக்கள் என்று தம்மைக் கருதுபவர்கள் அல்லது தமிழ்த் தேசியத்தின் கனடாப் பிரதிநிதிகள், பல இடையூறுகளை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த ஒரு அமைப்பின் மூலமாக மட்டுமே பாரிய கவன ஈர்ப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என்று அழுத்தங்களைக் கொடுத்ததாகவும், அது முடியாமற்போக தமது கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்த் தேசியத்துக்கான ஊடகங்கள் வழியாக குறித்த போராட்டத்துக்கு எதிரான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழ்த்தேசியத்துக்கானவை என்று தம்மைத்தாமே சொல்லிக்கொள்ளும் ஊடகங்களில் தமது கவன ஈர்ப்பு இருட்டடிப்புச் செய்யப்பட்டதாகவும், அதன் ஏற்பாட்டாளர்களான அனைத்துலக மனித கலாச்சாரப்பேரவையினர் கூறுகின்றனர். இது தொடர்பில் ஒரு கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. விரைவில் சில முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
“போராட்டங்களின்போது புலிக்கொடியும் தமிழீழத் தேசியத் தலைவரது படமும் கொண்டுவர வேண்டாம். நீங்களும் விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்தப்படலாம், அதனால் பிரச்சனைகள் வரலாம், அவை எங்களது கோரிக்கைகளைப் பாதிக்கலாம்” என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவுரை கூறியவர்கள் இப்போது கொண்டுவாருங்கள் என்கிறார்கள். இப்போது எல்லா நிகழ்வுகளிலும் புலிக்கொடி கம்பீரமாகப் பறக்கிறது. ஆனால் பலருக்கு ஆரம்பத்தில் கூறப்பட்ட அறிவுரையே மனதில் இன்னும் நிற்பதால், இந்த நிகழ்வுகளை அவர்கள் தவிர்த்து வருகிறார்கள். ஒன்று, தங்களைத் தெளிவாக்கி ஒரு நிலையான தீர்மானத்தை எடுத்து, அதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும், அல்லது புதிய தீர்மானத்திற்கான காரணத்தைத் தெளிவாக எல்லோருக்கும் விளக்கியிருக்க வேண்டும். இரண்டுமே நடந்ததாகத் தெரியவில்லை. இதைச் சொல்லப்போனால் துரோகி என்கிறார்கள் என்று ஒருவர் என்னிடம் அலுத்துக்கொண்டார். ஆரம்பகாலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக முழுமூச்சுடன் செயற்பட்ட பலர் இன்று ஒதுங்கியிருக்கிறார்கள். அல்லது தனித்து இயங்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணங்களை இங்கு சொன்னால் நானும் துரோகி ஆகிவிடுவேன். ஆகவே, வேண்டாம்...
அடுத்து, ஸ்ரீலங்காவின் உற்பத்திகளை நிராகரிக்கும் விடயத்திலும் பல முரண்பாடுகள். சிங்கள அரசுக்கு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்களை நிராகரியுங்கள் என்று கட்டுரைகளைப் போடும் கனடாவிலுள்ள முக்கியமான தமிழ்த் தேசியப் பத்திரிகையின் மறுபக்கத்தைப் பார்த்தால், சிலோன் நண்டுக்கும் வேறு ஸ்ரீலங்காப் பொருட்களுக்குமான விளம்பரம். “இதை யாரிடம் சொல்லி அழுவது” என்று என்னுடன் பணியாற்றும் ஒளிப்பதிவாளரிடம் கேட்டபோது, அவர் சிரித்தார். “கடைக்காரரோடு முரண்பட்டால் இருக்கிற வருமானமும் போயிடும். அதைவிட ஸ்ரீலங்காவிலிருந்து கடந்த 22 வருடங்களாக கனடாவுக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதே இங்குள்ள தமிழ்த் தேசியத்துக்கான பிரதான அமைப்பொன்றின் முக்கியஸ்தர்தான். இதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது தம்பி” என்று அவர், தனது பங்குக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார். இறக்குமதி செய்பவரும் விடமாட்டாராம், விற்பவர்களையும் தவிர்க்கச்சொல்ல மாட்டார்களாம், அப்போ யார் ஸ்ரீலங்காப் பொருட்களை நிராகரிப்பது? மக்கள் மட்டுமா?
கலைஞர், சன் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் தமிழக மக்களுக்கே எதுவும் செய்வதில்லை. இந்த லட்சணத்தில் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்துவிடமுடியும்? ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதே முட்டாள்த்தனம். ஆறு மாதங்களுக்கு முன்னர் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கனடா வந்தபோது, “யாராவது மக்கள் தொலைக்காட்சியை கனடாவில் மீள் ஒளிபரப்புச் செய்யுங்கள்” என்று கெஞ்சாத குறையாகக் கேட்டார். யாருமே அதைக் கணக்கெடுக்கவில்லை. இன்று மக்கள் தொலைக்காட்சிதான் ஈழத்தமிழர் பிரச்சினைகளை அதிகமாகச் சொல்கிறது. இதேவேளை, ஈழம் என்று ஒன்று இல்லை என்று உறுதியாகக் கூறிவரும் ஜெயலலிதாவின் ஜெயா ரீவிக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இந்தநிலையில், தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்குமாறு சொல்வதற்கும் அதைச் செய்வதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கின்றதே தவிர இங்குள்ள எந்த ஊடகத்துக்கும் உரிமை இருப்பதாகத் தோன்றவில்லை. தமிழ்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இல்லாமல் இயங்கக்கூடிய ஒரு தொலைக்காட்சியை 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக உருவாக்க முடியாதவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை. இங்கே இருக்கின்ற தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒன்று தமிழ்த்தேசியத்தை வைத்துப் பிழைத்துக்கொண்டிருக்க மற்றது இலத்திரனியல் உபகரணங்களையும் தமிழகத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளையும் வைத்துக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கிறது. போங்கையா நீங்களும் உங்க கொள்கைகளும்..


9 comments:
கலைஞர், சன் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் தமிழக மக்களுக்கே எதுவும் செய்வதில்லை. இந்த லட்சணத்தில் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்துவிடமுடியும்? ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதே முட்டாள்த்தனம். //
உண்மைதான்,. அதே நேரம் எமக்கு உதவினால்தான் நாம் அவற்றை பார்ப்போம் என்பது அவர்களின் ஆதரவை கட்டாயமாக்கி, அதன் மூலம் அவர்கள் தரும் ஆதரவி நீர்த்துபோக செய்துவிடும்.
அண்ணோ...எமக்குள்ளே ஒரு ஒற்றுமை இல்லாத நிலமை தான் நமது இனத்தை இன்று இந்த நிலையிற்குக் கொண்டு வந்திருக்கிறது??
எம்மவர்கள் பட்ட பிறகும் புத்தி தெளியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?
நன்றி அருண்மொழி
//அதே நேரம் எமக்கு உதவினால்தான் நாம் அவற்றை பார்ப்போம் என்பது அவர்களின் ஆதரவை கட்டாயமாக்கி, அதன் மூலம் அவர்கள் தரும் ஆதரவி நீர்த்துபோக செய்துவிடும்.//
திமுக என்ற கட்சியின் தீவிர விசுவாசிகள்/தொண்டர்கள் என்று பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இருக்கிறார்கள். இப்படியான ஒரு இயக்கத்தை எதிர்ப்பதன் மூலமாக அடையப்போகும் நன்மையை விட இழப்புக்கள் அதிகமானவை. உணர்வுகளால் ஆதரவைத் தேடுவதைவிட மிரட்டிப் பெறுவது இலகுவானது என்பது பலருடைய மனதில் ஆழப்பதிந்துள்ளதுதான் வேதனைக்குரியது.
வாங்க கமல்
//எம்மவர்கள் பட்ட பிறகும் புத்தி தெளியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?//
என்ன செய்துவிட முடியும் என்று சும்மா இருக்க முடியாது நண்பா. இனியும் பட்டுத்தான் தெளியவேண்டும் என்று நினைத்தால் அப்படித் தெளிவதற்குக் காலம் இடந்தராத நிலையும் ஏற்படலாம்.
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.
எங்கடை ஆக்களையும் திருத்தேலாது..
இலங்கையையும் திருத்தேலாது...
அதேதான் இனமும் இல்லை மதமும் இல்லை (என்னைப்பொறுத்த வரையில்) என்று பார்த்தாலும் இலங்கையில் மனிதமும் இல்லை...
புலிகளின் அடிப்பொடிகள் என்று கூறிக்கொள்பவர்களாலேயே மக்கள் ஒதுங்கிப்போகின்றார்கள். நீங்கள் சொல்வது மிகச்சரியே..
-களவாணி
வாங்க கிங் மற்றும் களவாணி
//எங்கடை ஆக்களையும் திருத்தேலாது..
இலங்கையையும் திருத்தேலாது..//
இலங்கையைத் திருத்தி இனி ஆகப்போவது ஒன்றுமில்லை. எங்கட ஆக்களத் திருத்திறத விட்டுட்டு மக்களை விழிப்படையச் செய்தாலே போதும்.
//புலிகளின் அடிப்பொடிகள் என்று கூறிக்கொள்பவர்களாலேயே மக்கள் ஒதுங்கிப்போகின்றார்கள்//
உண்மையானவர்கள் ஒதுங்கிப்போவதால் அல்லது ஒதுக்கப்படுவதால் இதுவரை போராளிகளும் மக்களும் செய்த தியாகங்கள் வீணாகிவிடக்கூடாது என்பதுதான் என் ஆதங்கம்.
Post a Comment